புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட குடும்ப பெண்ணிற்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குடும்பப் பெண் ஒருவர் 6.5 கிராம் கஞ்சாவுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். அடசூரிய அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் படி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்ப பெண் ஒருவர், தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக 6.5 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்பின்னர் அவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (19.02.2026) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.