கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை
ஹொரணை, போருவதண்ட பகுதியில் உள்ள தங்குமிட அறை ஒன்றில் தங்கியிருந்த இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது.
மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் போருவதண்ட, ரத்மல்கொட, தீரானந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த லியனகே சோமசிறி (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர் கடந்த ஐந்து மாதங்களாக போருவதண்ட, சல்மல் கந்த பகுதியில் உள்ள அறை ஒன்றில் தற்காலிகமாகத் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.
அதே அறையில் கடந்த மூன்று மாதங்களாகத் தங்கியிருந்த மற்றுமொரு இளைஞருடன் நேற்றுமுன்தினம்(22) மாலை ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது, மேற்படி இளைஞர் அங்கிருந்த மண்வெட்டியால் குடும்பஸ்தரைத் தலை மற்றும் உடலில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக கிரிஎல்ல, அலகாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியையும் பொலிஸார் சான்றுப் பொருளாகக் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.