வாகன அபராதக் கட்டண அதிகரிப்பு குறித்து பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸார் விளக்கம்
மோட்டார் வாகனங்களுக்கான அபராதக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மோட்டார் வாகன போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி. பி. ஏ. சேனாதீர தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அதிக சத்தம் எழுப்பும் வகையிலான சைலன்சர்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு எதிராக தற்போது பொலிஸ் நிலையங்கள் ஊடாக சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் பொசோன் உற்சவ காலப்பகுதியிலும் மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டங்கள் மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.