தேர்தல் தொடர்பில் வெளியான போலிச் செய்திகள்! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் தொடர்பில் பொய்யான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commision of Sri Lanka) தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது தேருநர் இடாப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள தேருநர்களுக்கு நாட்டின் எந்தவொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்களிப்பதற்குரிய வசதி செய்யப்பட்டுள்ளது என ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.
எனினும், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என தேர்தல் ஆணைக்குழு இன்று (06.08.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் வேண்டுகோள்
மேலும், தான் தேருநர் ஒருவராக தேருநர் இடாப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாக்கெடுப்பு மாவட்டத்திற்குரிய வாக்கெடுப்பு நிலையத்திற்கு வருவதன் மூலமும், அஞ்சல் வாக்கு உரித்துடையவர்களுக்கு தமது அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் அலுவலகத்தில் அவரது முன்னிலையில் தனது வாக்கை அளிப்பதன் மூலமும் தேர்தல் சட்டதிட்டங்களின்படி வாக்களிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்காத தகவல்களை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடகங்களிடம் ஆணைக்குழுவால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |