எரிபொருள் இன்றி திரும்பிய லொறிகள் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு
கொலன்னாவ எண்ணெய் முனையத்திற்கு வந்த எரிபொருள் நிரப்பும் லொறிகள் எரிபொருள் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக ஊடகங்களில் வரும் செய்திகளும் தகவல்களும் முற்றிலும் பொய்யானவை என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனை கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே இதை உறுதிப்படுத்தினார்.
இன்று விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள், நேற்றிரவே விடுவிக்கப்பட்டது.
எரிபொருள் கையிருப்பு
எனினும், இன்று கூடுதல் எரிபொருள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த லொறிகள் கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திற்கு வந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடுதல் எரிபொருள் எதுவும் விடுவிக்கப்படாததால், லொறிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டன.
அதற்கமைய, எரிபொருள் பற்றாக்குறையால் அல்ல, நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டிய கூடுதல் எரிபொருள் விடுவிக்கப்படாமையினால் லொறிகள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எரிபொருள் விண்ணப்பம்
நாட்டிற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு மே மாத இறுதி வரை போதுமான அளவு உள்ளதாக பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்காலத் தேவைகளுக்காக கூடுதல் எரிபொருள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற முறையில் பீதியடைய வேண்டாம் என மயூர நெத்திகுமரகே அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் நெருக்கடி நிலையை உருவாக்கும் நோக்கில் சில ஊடங்கள் திட்டமிட்டு இவ்வாறான போலியான தகவல்களை பரப்பி வருவதாக நிர்வாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.