திருமணம் செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றும் போலி அதிரடிப்படையின் உயர் அதிகாரி கைது
இரத்தினபுரி, பலங்கொடையில் திருமணம் செய்வதாக கூறி யுவதியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்தி, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, யுவதி ஒருவருடன் காதல் உறவை ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் அவரிடமிருந்து 1,27,000 ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல், கல்கமுவ பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
யுவதிகளை ஏமாற்றி பணம் மோசடி
சந்தேக நபர் விசேட அதிரடிப்படை அதிகாரி எனக்கூறி மேலும் பல யுவதிகளை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தான் விசேட அதிரடிப்படை சீருடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை உருவாக்கி, அவற்றை தனது சமூக ஊடகக் கணக்குகளில் காட்டி யுவதிகளை ஏமாற்றியுள்ளார்.
பலங்கொடை பகுதியை சேர்ந்த யுவதியுடன் காதல் உறவை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அவரைத் திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்த சந்தேக நபர், அந்த யுவதியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அவ்வாறு வந்த ஒரு சந்தர்ப்பத்தில், யுவதியின் வங்கி அட்டையை சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளார். அதிலிருந்து 1,27,000 ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.

பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வந்ததையடுத்து, இது குறித்து அறிந்த யுவதி பலங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் சந்தேக நபர் குறித்து விசாரித்த போது, அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, யுவதி தந்திரமாக சந்தேக நபரை பலங்கொடை நகரத்திற்கு வரவழைத்த போது, பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.