ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த முகநூல்: ரஷ்யா எடுத்த முடிவு
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தாக்குதலுக்கு மத்தியில் ரஷ்யா, தமது நாட்டினர் முகநூல் பக்கத்திற்குள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெஸ்கோ ஆதரவு ஊடகங்களின் கணக்குகள் தொடர்பாக முகநூல் நிறுவனம் கொண்டு நிலைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை தொடங்கிய தினத்திற்கு மறுநாள் அதாவது நேற்று (25) அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகநூல் மூலம் ரஷ்ய குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீறப்படுவதாக ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் ரொஸ்கொம்னாடிசோ குற்றம் சுமத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள முகநூல் நிறுவனம், ரஷ்ய அரசாங்கத்திற்குரிய செய்தி நிறுவனம் வெளியிடும் செய்திகளின் உண்மை மற்றும் பொய்களை ஆய்வு செய்வதை நிறுத்துமாறு ரஷ்யா விடுத்த கோரிக்கை நிராகரித்ததாக கூறியுள்ளது.
எவ்வாறாயினும் ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் என்ன செய்ய முயல்கிறது என்பது தெளிவில்லை என சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மேடா நிறுவனத்தின் ஏனைய சமூக ஊடகங்களான வட்ஸ் அப், பேஸ்புக் மெசேஞ்ஜர், இன்ஸ்டாகிராம் என்பவற்றை இந்த கட்டுப்பாடுகள் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவில்லை.
சாதாரணமாக ரஷ்யர்கள் தமது கருத்துக்களை வெளியிடவும் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்யவும் மேடா நிறுவனத்தின் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ரஷ்யர்களின் குரலை தொடர்ந்தும் கேட்க வேண்டும் என்ற தேவை தமது நிறுவனத்திற்கு இருப்பதாக மேடோ நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான உப தலைவர் ஸ்ரீமன் நிக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரஷ்யாவின் பல அரச ஊடக நிறுவனங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக பெரும்பாலும் நேர்மறையான தோற்றத்தை உருவகித்து காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ரஷ்ய ஊடகங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சிறப்பு இராணுவ நடவடிக்கை கூறி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் மோதல்கள் சம்பந்தமான பதிவேற்றம் செ்யயப்படும் தகவல்களை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை மையம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக மேடோ நிறுவனம் நேற்று அறிவித்தள்ளது.