தாய் வெளிநாட்டில் - பேஸ்புக் காதலனால் மாணவிக்கு நேர்ந்த கதி
கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் சீண்டல் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாணவியின் தாய் வெளிநாடு சென்ற நிலையில், தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் மாணவி இருந்துள்ளார்.
தாய் இல்லாதது குறித்த தனது கவலையைப் போக்க பேஸ்புக்கில் நேரத்தை செலவிட்டுள்ளார். இந்த நிலையில் பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவருடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார்.
தகாத உறவு
இந்த அறிமுகம் காதலாக மாறியது, ஒரு மாதத்திற்குள், இளைஞன் மாணவியின் வீட்டிற்கு வந்து அவரை தகாத உறவுக்கு உட்படுத்திய நிலையில் நகைகளை எடுத்து சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்ததும், தந்தையும் பாட்டியும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞனின் இருப்பிடம் தெரியாமையால், பேஸ்புக் காதலரை மீண்டும் அழைத்து வர பொலிஸார் ஒரு திட்டத்தை வகுத்தனர்.
அந்த மாணவி அவரை அழைத்து, மீதமுள்ள நகைகளை நான் கொண்டு வருகிறேன்... எங்காவது சென்றுவிடலாம் என இளைஞனிடம் குறிப்பிட்டுள்ளார்.
திருமண வயது
அதற்கு சம்மதித்து கம்பளை நகரத்திற்கு இளைஞன் வந்த போது மறைந்திருந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்த இளைஞன், திருமண வயது வந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக பொலிஸாரிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
அத்துடன் மாணவியிடம் பெற்ற நகைகளையும் மீளவும் ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.