திருகோணமலையில் பல ஏக்கர் காணி அபகரிப்பு : குகதாசன் குற்றச்சாட்டு
திருகோணமலையில் (Trincomalee) மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் இதனை ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்டளுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்று நேற்று (16) இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான விவசாய நிலங்களுக்கான குளங்கள் வாய்க்கால்கள் காணப்படுகிறது இது தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக முயற்சிப்பதோடு ஆசிரியர் வெற்றிடங்கள் 500ம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் 100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது.
இதனால் சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன. வெளிநாடுகளில் வைத்தியர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை இடம் பெறுகின்ற போதும் இங்கு சிற்றூழியர்கள் உதவிக்காக இன்மையால் பிற்போடப்படுகிறது.
சமூக மேம்பாடு
கல்வி சுகாதாரம் சமூக மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றினைந்து செயற்படுவோம்.
1976களின் பின் கட்டுகுளப் பகுதிக்கு முதல் நாடாளுமன்ற பிரதிநிதி நானே. இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
பிரான்ஸ் நாட்டின் அதிபதியான நெப்போலியன் கூறியது போன்று பல காலம் பேச்சாளராக இருப்பதை விட சில மணி நேரம் செயலாளராக இருப்பது சிறந்தது“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பில் முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் உட்பட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |