எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நஷ்டஈடு தொடர்பில் சட்டமா அதிபருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இழப்பீடு குறித்த உத்தரவு தொடர்பில் எடுக்கப்படவுள்ள மேலதிக நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் வினா தொடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கான பாதிப்பு மற்றும் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட மாசு என்பவற்றிற்கு இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துமாறு கப்பல் நிறுவனத்துக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இழப்பீடு தொகை
குறித்த இழப்பீட்டின் ஒரு தொகையை செப்டம்பர் மாதத்திற்குள்ளாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கப் போவதில்லை என்று சிங்கப்பூரைச் சேர்ந்த குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன்போது கப்பல் நிறுவனத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வினா எழுப்பியது.
அத்துடன் அது தொடர்பில் உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிட்டு வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



