மோடியின் இலங்கை விஜயம்! அநுரவின் செயலை விமர்சிக்கும் சரத் வீரசேகர
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தம்
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மோடி நாட்டுக்கு வந்தார் என்பதற்காக தற்போதைய அரசாங்கம் விரும்பும் விதத்தில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடியாது. இந்த அரசாங்கம் நாட்டின் உரிமையாளர்கள் இல்லை. பொறுப்பாளர்கள் மாத்திரமே.
எனவே, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தீர்மானங்களை எடுக்கும் உரிமை நாட்டின் பொறுப்பாளர்களுக்கு இல்லை. எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பே முக்கியமாகும்.
பாதுகாப்பு உடன்பாட்டு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் என்னவென்பதை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்றமும் தெரிந்துகொள்ள வேண்டும்.
மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஜனாதிபதி அநுரகுமார விரும்பியது போன்று இதுபோன்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியாது.
நாட்டின் சுயாதீனத் தன்மை
நாங்களும் இதுபோன்ற பாதுகாப்பு ரீதியான பயிற்சிகளை பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த ஒப்பந்தத்திலும் அதற்கு அப்பாலானவொன்று இருக்க வேண்டும்.
நாட்டின் சுயாதீனத் தன்மை மற்றும் இறையாண்மையை வெளிநாடுகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாது. நாம் நெருக்கடியில் இருக்கும் நாடு என்ற அடிப்படையில் ஒருதலைபட்சமாக ஒரு அதிகார முகவரின் கீழ் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட்டால் ஏனைய நாடுகள் எம்முடன் விரோதமாகிவிடும்.
ஜெனீவா கூட்டத்தொடரில் கூட ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே எமக்கு ஆதரவாக செயற்பட்டன. இந்தியா எமக்கு ஆதரவாக வாக்களித்திருக்கவில்லை. அவ்வாறான நாடோடு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் ஏனைய நாடுகள் அநீதிக்குள்ளாகும்’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |