புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் 22 இந்தியர்கள் கைது
காலாவதியான விசாக்களுடன் ராஜகிரியவில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் பணிபுரிந்த, 22 இந்தியர்கள், குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின்படி, இந்த இந்தியர்கள், நாடுகடத்தப்படும் வரை வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியர்கள் கைது
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர், இன்று(10) பிற்பகல் ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தை சோதனை செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்களில் பதினேழு பேர் சுமார் 03 மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர் 04 பேர் வதிவிட விசாக்களின் கீழும் மற்றும் ஒருவர் வணிக விசாவின் கீழும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
முன்னதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு இந்தியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இந்த இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.