பதவி விலகும் பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர்: வெளியாகிய காரணம்
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து பென் வொலஸ் விலகவுள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவில் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்திருந்த நிலையில், பென் வொலஸ் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கை
பிரித்தானியாவின் மூன்று பிரதமர்களின் கீழ் பாதுகாப்பு செயலாளராக பென் வொலஸ் கடமையாற்றியுள்ளார். குறிப்பாக உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் பிரித்தானியாவின் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உயர்மட்ட பங்கை அவர் வகித்திருந்தார்.
அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பாதுகாப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு பென் வொலஸ் திட்டமிட்டுள்ளார்.
தனது குடும்பத்தை கருத்தில் கொண்ட முன்கள அரசியலில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் ரிஷி சுனக்கின் தலைமைத்துவம் காரணமாக தாம் பதவி விலகவில்லை எனவும் பென் வொலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் ரிஷி சுனக், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது அமைச்சரவையை மறுசீரமைப்பதற்கு திட்டமிட்டுள்ள போதிலும் அதற்கான திகதியை இதுவரை நிர்ணயிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |