வவுனியா வடக்கு உப தவிசாளரின் முன்மாதிரியான செயற்பாடு
வவுனியா வடக்கு உப தவிசாளர் பெரியமடு விவசாயிகளின் கோரிக்கையையடுத்து தனது மற்றும் நண்பரின் சொந்த நிதியில் வயல் வீதியை புனரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினரான விநாயகமூர்த்தி சஞ்சுதன் தனது சொந்த வட்டாரமான சின்னடம்பன் பகுதியில் வெற்றி பெற்று உப தவிசாளராக செயற்பட்டு வருகின்றார்.
மக்களுக்கான அபிவிருத்தியை
வவுனியா மாவட்டத்தில் அதிக நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கும் பிரதேச சபை வவுனியா வடக்கு பிரதேச சபையாகும்.
இந்நிலையில், வவுனியா வடக்கு பெரியமடு கிராமத்தில் வசிக்கும் பெரியகுளம் வயல் விவசாயிகள் உப தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய வயல் வீதியினை தனது சொந்த நிதி மூலமும், தனது நண்பரான ஆசிரியரது நிதியின் மூலமும் குறித்த வீதியினை புனரமைத்து விவசாயிகள் வயல்களுக்கு பயன்படுத்தும் வகையில் செய்து கொடுத்துள்ளார்.
இதன்போது குறித்த பகுதி விவசாயிகள் தமது உழவு இயந்திரத்தினையும் சேவையில் ஈடுபடுத்தி இருந்தனர்.
மக்களுடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தியை சொந்த நிதியில் மேற்கொண்டமை பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இதேவேளை, குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளூராட்சி மன்றத்திலும் வட்டாரத்தில் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








