ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் மண் அகழ்வு நிறுத்தப்படும்: வியாழேந்திரன் சூளுரை (Photos)
மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்காலத்தில் மண் அகழ்வு நீக்கப்படும் என வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் உள்ள தாமரைக் குளத்தருகே நேற்றைய தினம் (05.06.2023) இடம்பெற்ற உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியுள்ளார்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையில் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிராம பொது மக்களால் குளத்தருகே கொட்டப்பட்ட பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றப்பட்டதோடு மர நடுகையும் இடம்பெற்றுள்ளது.
அனுமதிப் பத்திரங்களை வழங்குவதா இல்லையா
மேலும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களால் விழிப்புணர்வு நாடகமும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலே 1,300 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 30 ஆகக் குறைக்கப்பட்டிருக்கும் அனுமதிப் பத்திரங்களைக் கூட அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறுத்தி மண் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதா இல்லையா என்று தீர்மானிப்பதற்குச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
அதேபோன்று ஏனைய கனிய வள அகழ்வுகளையும் இப்பொழுது நிறுத்தி வருகின்றோம். ஏனென்றால் இதற்கு அனுமதி வழங்கும் பொழுது எங்களுடைய பெயரும் சேர்த்து அடிபடுகிறது.
பொலித்தீன் மிக ஆபத்தானது
நான் அனுமதி வழங்குவதில்லை. சில திணைக்களங்கள் வழங்கும் பொழுது பிழையான நடவடிக்கைகளால் எங்களுடைய பெயர்களும் களங்கப்படுத்தப்படுகிறது.
இதற்கெல்லாம் அப்பால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பு எமக்கிருக்கின்றது.
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் அகம் நிறுவனம் அரும்பாடுபட்டு வருகின்றது. அதனை நான் வரவேற்கின்றேன். சுற்றுச்சூழலைச் சேதப்படுத்துவதிலும் மாசுபடுத்துவதிலும் பொலித்தீன் மிக ஆபத்தானது.
சுற்றுச் சூழல் அதிகார சபை
20 பில்லியன் பொலித்தீன் இலங்கையில் பாவனையில் உள்ளது. இது உக்கிப்போவதற்கு 100 வருடங்களுக்கு மேல் ஆகலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையினால் இந்த சுற்றுச் சூழல் பேரழிவிலிருந்து நாம் இந்தப் பூமியைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் கே. பவாகரன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளர் வி.பற்குணம், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் பிரதேச செயலக சுற்றுச் சூழல் அலுவலர் எம்.ஐ.ஐயூப், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் சுதாகரி மணிவண்ணன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூபா சுகுமாரன் உட்பட இன்னும் பல அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |