70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்: தொடரும் குற்றச்சாட்டு
அண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை மாவட்ட பாடசாலையான சாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமையானது, திட்டமிட்ட சதி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (03) கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்று (03) திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபரையும், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது, பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகள், செஞ்ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரி மீதும் மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை குறித்தும் பாரிய சந்தேகத்தை எமக்கு தோற்றுவித்துள்ளது.
காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு
திருகோணமலை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பாடசாலைகளை விட, குறிப்பாக ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில், கடந்த 10 வருட காலமாக குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவத்துறையிலும், பொறியியல் துறையிலும் தேர்வாகி வரும் நிலையில், இந்த செயல் கல்லூரி மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றது.
இம்முறை 04 மாணவிகள் பொறியியல் துறைக்கும், 09க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவத் துறைக்கும் தெரிவுசெய்யப்படுவார்கள் என்று கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே பெறுபேறுகள் வெளியாகாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கல்வித் திணைக்களத்தினால், கல்லூரி அதிபருக்கும் 70 மாணவிகளுக்கும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது, மேலதிக பரீட்சை பொறுப்பதிகாரி நடந்துகொண்ட விதம் தொடர்பாக, மாணவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை குழுவுக்கு முன்வைத்துள்ளனர்.
பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்திகளுக்கு சாப்பிடுவதற்கு கச்சான் வழங்கியதாகவும், பர்தாவும் துப்பட்டாவும் அணிந்திருந்த மாணவிகள் அனைவருக்கும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரமாட்டாது என்பதனை, பல சந்தர்ப்பங்களில் பரீட்சை மேலதிக பொருப்பதிகாரி கூறி வந்தமையும், இதனால் பரீட்சையில் தோற்றிய மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், கல்வித் திணைக்கள சட்ட நடவடிக்கை குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.
வலயக் கல்விப் பணிமனை
மேலும், கல்வித் திணைக்கள விசாரணை குழுவினர், ஒவ்வொரு மாணவியரும் அவர்களின் வாக்குமூலங்களை எழுதுவதற்கு முன்னர், திருமலை வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்த சிலர் அவர்கள் சொல்வதை முதலில் எழுதச் சொன்னார்கள். அதன் பின்னர், வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட நிலையில், வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கூறுவதையே முடிவாக எழுதச்சொல்லி மாணவிகளை பணித்திருக்கிறார்கள்.
பின்னர், ஒவ்வொருவரும் சுயமாக எழுத்துமூலம், வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். இதில் சிலருக்கு பரீட்சை பெறுபேறுகள் வரமாட்டாது” என்றும் கூறியிருக்கிறார்கள். இதனை குறித்த, மேலதிக பரீட்சை மண்டப அதிகாரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |