ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் கூட்டணி ரணிலின் வெற்றிக்கு சவாலாக அமையாது: முன்னாள் எம்.பி ஆரூடம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் கூட்டணி மக்களைத் திசை திருப்புவதற்காக அரங்கேற்றப்பட்டதாகும். அதனால் அந்த கூட்டணி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு எந்த சவாலும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலை முன்னிட்டு கூட்டணி ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.
இந்த கூட்டணியில் நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்துவரும் உறுப்பினர்களைத் தவிர புதியவர்கள் யாரும் இணையவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் மக்கள் ஒன்று கூடிவருவதை திசை திருப்பும் நோக்கிலே இந்த கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
நாட்டை கட்டியெழுப்புதல்
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஒருபோதும் சவாலாகப்போவதில்லை. அதேநேரம் அந்த கூட்டணியில் இருப்பவர்கள் எதிர்வரும் காலங்களில் படிப்படியாக ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துகொள்வார்கள்.
அதனால் இந்த தேர்தலில் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் போட்டியிடுகின்ற வேட்பாளரான ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதா அல்லது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துவரும் பேட்பாளரை ஆதரிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். மேலும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டு, நாடு தற்போது ஸ்திரநிலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறது.
ரணில் விக்ரமசிங்க கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தினை இன்னும் சில வருடங்களுக்கு முன்னெடுத்துச் செல்ல முடியுமானால் 2027, 28 ஆகும்போது நாடு பொருளாதார ரீதியில் ஸ்திர நிலையை அடையும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறே ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
பொருளாதார ஸ்திர தன்மை
நாடு பொருளாதார ரீதியில் ஸ்திர தன்மையை அடைவதை சகித்துக்கொள்ள முடியாமலே எதிர்க்கட்சி பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்வதே இவர்களின் நோக்கம்.
அதனால் எதிர்வரும் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். இந்த தேர்தலில் மக்கள் எடுக்கப்போகும் தீர்மானத்திலேயே நாட்டின் எதிர்காலம் தங்கி இருக்கிறது.
அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்ற நோக்கிலேயே ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளார். அதனால் நாட்டை நேசிக்கும் யாருக்கு வேண்டுமானால் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துகொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |