நள்ளிரவில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் மகன் - சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்
ஹபரணை - அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி இரவு வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், தற்போது உயிரிழந்த முன்னாள் புத்தசாசன மற்றும் காணி அமைச்சரொருவரின் 50 வயதுடைய மகன் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி
ஏனைய சந்தேகநபர்கள் 25, 26, 31 மற்றும் 44 வயதுடைய கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.

ஹபரணை - திருகோணமலை வீதியில், யகா வங்குவ அருகில் அமைந்துள்ள காணி ஒன்றிலேயே இந்த அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்திலும் சந்தேகநபர்கள் 8 அடிகள் வரை ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
சந்தேகநபர்களுடன் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், இரும்புத் கம்பிகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல வழக்குப் பொருட்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.