தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் தமிழக காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்
விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளராக கூறப்படும் ஒருவர் இலங்கையின் பாதாள உலக செயற்பாட்டாளரான டொன் அங்கொட லொக்காவுடன் தொடர்பை கொண்டுள்ளதாக தமிழக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து 2021 ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு கடத்திவரப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்த்து தொடர்பில் சற்குணம் என்று அழைக்கப்படும் சபேஷன் என்பவர் தமிழக குற்றப்புலனாய்வு துறையினாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து சின்ன சுரேஷ் மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய செயற்பாட்டாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் குற்றப்புலனாய்வு துறையின் விசாரணைக்கு தலைமை தாங்கும் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பி. சிவகுமார் தமது விசாரணை முன்னெடுத்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழர்களும் இலங்கையின் பாதாள உலக செயற்பாட்டாளர்களான அங்கொட லொக்கா, லதியா என அழைக்கப்படும் சானுக்க தனநாயக்க ஆகியோருடன் தொடர்புகளை கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விசாரணையின் படி சபேஷனும் சின்ன துறையும் குற்றச் செயல்கள் தொடர்பிலேயே இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளனர். அதேநேரம் லொக்காவும், லதியாவும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இதில் அங்கொட லொக்கா 2020ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் போது லதியாவும், கோபால கிருஸ்ணன் என்றழைக்கப்பட்ட ஜெயபிரகாசும் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களே தமக்கு சபேஷன், சின்ன சுரேஷ் மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோருடன் தொடர்பிருப்பதாக கூறினர். இதேவேளை, அங்கொட லொக்காவின் மறைவை அடுத்து அவருடைய போதை வஸ்து வியாபாரத்தை லதியாவே கவனித்து வந்துள்ளார்.