சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள்
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று (5)காலை கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மரம் நடுகையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வுக்கான 300 கண்டல் தாவரங்களை டினோஸா கண்டல் தாவரப் பள்ளி (Dinosha Mangrove Nursery ) வழங்கியிருந்தனர்.
இந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப் ,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கனகரெத்தினம் திலீபன் ,மன்னார் மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ சுற்றுச்சூழல் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி-ஆஷிக்
முல்லைத்தீவு
சர்வதேச சுற்றுச்சூழல் இன்று கொண்டாடப்படும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பட்டணச் சூழலை தூமைப்படுத்தும் சிரமதானப்பணி மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 6.30 மணி தொடக்கம் காலை 8.00 மணிவரை நடைபெற்றது.
இந்த சிரமதானப்பணியில் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் முபாரக், மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், பதவிநிலை உத்தியோகத்தர்கள்,ஏனைய உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி-தவசீலன்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பூநகரி பிரதேச செயலகம் ஆகியன இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பன கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளானது இன்று(05-06-2024) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டன.
அதாவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தெருவொளி நாடக அரங்காற்றுகை செய்யப்பட்டது.இதில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
செய்தி-யது
மட்டக்களப்பு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் அமைச்சினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்பட்டுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுற்றாடல் தின நிகழ்வு இன்று(05.06.2024) மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு இராம கிருஷ்ன மிஷன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கலந்து கொண்டார்.
செய்தி-ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |