பாதி வாழ்க்கையை மற்றவர்களுக்காகவே செலவிடும் பெண்கள் : மேலதிக அரசாங்க அதிபர் கருத்து
"உன்னிப்பாகக் கவனித்தால் பெண்கள் தங்களது வாழ்க்கைக் காலத்தின் பெரும்பாலான பகுதியை மற்றவர்களுக்காகவே அர்ப்பணிக்கின்றார்கள் . இதுவொரு உயர்ந்தபட்ச தியாகமாகும்.” என திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட பெண்கள் செயலணியினரின் பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகைளிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், "அலுவலகம், பொதுத் தொண்டு என்று பெண்களின் பணியும் பங்கும் பாத்திரமும் தியாகத்துடன் கூடியது. தமது சொந்த நலன்களைப் புறந்தள்ளி விட்டு அடுத்தவர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து அடுத்தவர்களுக்காகவே சிந்தித்து அடுத்தவர்களுக்காகவே ஓய்வின்றி உழைத்து உருக்குலைந்து போகும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இல்லை.
அனுபவப் பகிர்வு
எனவே, அவர்களுக்கும் இந்த மானுடப் பிறவியில் மகிழ்ச்சியும் ஓய்வும் உடல் ஆரோக்கியமும் உரிமைகளும் தேவை. பொருளாதாரச் சுமை குடும்பச் சுமை உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே சுமக்க வேண்டியுள்ளது. எனவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் இல்லாமலாக்கி பெண்களை ஆளுமை மிக்கவர்களாக வலுவூட்டுவதற்கு முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட செயலக அலுவலர்கள், பெண்கள் அபிவிருத்தி அலுவலர்கள், மாவட்ட பெண்கள் செயலணித் தலைவி, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஒன்று கூடல் அனுபவப் பகிர்வு நிகழ்வில் கலை அம்சங்களும் கேள்வி பதில் போட்டிகளும், தனி குழு நடனங்களும் விருது வழங்கலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.