இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக விருப்பங்களை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக எதிர்வரும் ஏப்ரல் 28 முதல் மே 7 வரை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
ஜிஎஸ்பி பிளஸில் இருந்து, பயனடைவதற்காக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள, வழக்கமான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு விஜயத்தின் ஒரு பகுதியாக, இந்த விஜயம் அமைந்துள்ளது.
தள விஜயம்
இந்த குழு, அரச அதிகாரிகள், தொடர்புடைய நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகம், வணிக சங்கங்கள், தொழிற்சங்கங்களைச் சந்திக்கும், மேலும் தள விஜயங்களையும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்பி பிளஸில் இருந்து பயனடையும் எட்டு குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருமான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
இது மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச நியமங்களை கருத்திற்கொண்டு, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படுகிறது.
சந்தைக்கு வரி
இந்த 27 சர்வதேச நியமங்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை,கண்காணிக்கப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் 450 மில்லியன் மக்கள் தொகை கொண்ட 27 உறுப்பு நாடுகளின் ஒற்றை சந்தையாகும்.
2024 ஆம் ஆண்டில் 2.7 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஏற்றுமதியை, இலங்கை, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மேற்கொண்டுள்ளது.
இந்த ஏற்றுமதிகளில் சுமார் 85வீதமானவை, ஜிஎஸ்பி பிளஸ் மூலம், ஐரோப்பிய சந்தைக்கு வரி இல்லாத பொருட்களாகும் என்பது குறிப்பிடத்தகக்து.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
