ஐரோப்பிய விமான சேவைகள் பாதிக்கக் கூடிய அபாயம்
ஈரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்படாவிட்டால், மூன்று வாரங்களுக்குள் ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய விமான சேவை பேரவை எச்சரித்துள்ளது.
பெர்சிய வளைகுடா பகுதி, ஐரோப்பாவின் விமான எரிபொருள் இறக்குமதியில் சுமார் 50% பங்கைக் கொண்டுள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் ஏற்படும் இடையூறுகள் நேரடியாக ஐரோப்பாவின் விமான சேவைகளை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

கோடை சுற்றுலா காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் உறுப்பினர்களிடையே எரிபொருள் கிடைப்பது குறித்து அதிகரிக்கும் கவலை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறிய விமான நிலையங்கள் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டால், விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் வான்வழி இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் இது சமூகங்களுக்கும் ஐரோப்பா பொருளாதாரத்துக்கும் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ஐரோப்பிய விமான சேவை பேரவையின் பணிப்பாளர் ஒலிவர் ஜான்கோவி தெரிவித்துள்ளார்.
மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்து மூன்று வாரங்களுக்குள் நிலையான முறையில் மீளத் தொடங்காவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை நிச்சயமாக உருவாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், உலகம் முழுவதும் பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே சில சேவைகளை குறைத்தும், பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணங்களை உயர்த்தியும் வருகின்றன.
ஐரோப்பிய ஜெட் எரிபொருள் விலை கடந்த வாரம் டன்னுக்கு 1,838 அமெரிக்க டாலராக உயர்ந்து வரலாற்றிலேயே அதிகபட்ச நிலையை எட்டியுள்ளது. போருக்கு முன்பு இது சுமார் 831 டாலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.