நாட்டில் இனவாத - மதவாத மோதல்கள் மீண்டும் உருவெடுக்குமா..! சந்தேகத்தை வெளிப்படுத்திய பந்துல
இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வகையில் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனவாத, மதவாத மோதல்கள் மீண்டும் உருவெடுக்குமா என்ற சந்தேகம் இதனால் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கருத்து மோதல்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதித்துறைக்கு சவால்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இனவாத, மதவாத மோதல்கள் மீண்டும் உருவெடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வகையில் மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமல்ல மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுகின்றனர்.
அவர்களின் கருத்துக்கள் நாட்டின் நீதித்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளன.
அதியுயர் சபையான நாடாளுமன்றத்திலும் சபை விதிமுறைகளை மீறி மக்கள் பிரதிநிதிகள் கூச்சலிடுகின்றனர். இனவாத, மதவாதக் கருத்துக்களை அள்ளி வீசுகின்றனர்.
நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில், முதலில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருந்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |