பெருந்தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு: மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பிக்குமாறு 21 தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.
குறித்த வழக்கானது, இன்று (03.06.2024) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
வர்த்தமானி அறிவித்தல்
இந்நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி 21 தோட்ட நிறுவனங்கள் மனு ஒன்றினை தாக்கல் செய்தன.
இதனை தொடர்ந்து, இந்த மனுவிற்கமைய, தடை உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரியிருந்த நிலையிலேயே அதனை மறுத்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், வழக்கு விசாரணையின் போது, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சார்பாக ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவும், சம்பள சபையின் செயலாளர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி அப்ரூவும் முன்னிலையாகியிருந்தனர்.
மனு தாக்கல்
இந்நிலையில், சம்பளச் சபையைக் கூட்டிய போது தோட்டக் கம்பனிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும், தொழில் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய தொழில் ஆணையாளர் சம்பளத்தை அதிகரிக்க சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது, தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சட்ட அதிகாரம் உள்ள ஒருவரால் கையொப்பமிடப்படவில்லை என ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார் .
இதற்கமைய, மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தோட்டக் கம்பனிகள் கோரிய தடை உத்தரவை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |