300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி: வலுவடையும் இலங்கை ரூபாவால் கிடைக்கப்போகும் நன்மை
டொலரின் பெறுமதி சுமார் 300 ரூபாவாக குறைந்துள்ள நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைவது எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முட்டை இறக்குமதி
அவர் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் 70 - 75 ரூபா வரை விலை உயர வேண்டிய ஒரு முட்டையின் விலையானது அரசாங்கம் முட்டைகளை இறக்குமதி செய்வதால் 40 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தலையிட்டு விலையை கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேவேளை சந்தையில் முட்டையின் விலை 40 ரூபாவிற்கு குறைவாக இருந்தால் இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.
குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உள்ளூர் மற்றும் இறக்குமதி பொருட்களான மரக்கறிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியதையடுத்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நடுத்தர அளவிலான இளஞ்சிவப்பு வெங்காயத்தின் இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |