பகிஸ்கரிப்பு எதிரிக்கு சேவை செய்யும், வாக்களிப்பு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும்
ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும் இடையில் உள்ள பாரதூரமான வேறுபாடு என்ன?.
பகிஸ்கரிப்பதானது வெல்லப்போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமமானது. அது சிங்கள ஜனாதிபதி வேட்பாளரின் வாக்கு வீதத்தை அதிகரிக்கவே உதவும்.
அதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை.
மாறாக அளிக்கப்பட்டு செல்லுபடி ஆகும் வாக்குக்களில் இருந்தே கணிக்கப்படும். அளிக்கப்பட்டு செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குக்கனைப் பெறும் ஒருவர் வேட்பாளர் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே ஜனாதிபதியாகத் தெரிவாவார். . எவ்வளவு அதிகமாக வாக்களிக்கப்படுகின்றதோ அவ்வளவு வாக்குகளில் அவர் 50 வீதத்துக்கு மேல் பெறவேண்டும்.
ஆனால் பகிஸ்கரிப்பதன் மூலம் குறைந்த வாக்குகளே அளிக்கப்படும் என்பதால் குறைந்த வாக்குகளில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெறும் ஒருவர் குறைந்த அளவு வாக்குகளுடன் இலகுவாக ஜனாதிபதியாகிடுவார்.
எனவே, நாடளாவிய ரீதியாக பதியப்பட்ட மொத்த வாக்குகளில் ஈழத் தமிழர் கொண்டுள்ள பதியப்பட்ட வாக்குகளின் விகிதம் 11 சதவீதத்திற்கு மேலாகும். இந்தப் 11 சதவீதத்திற்கு மேலான ஈழத் தமிழரும் வாக்களிக்காது பகிஸ்கரித்தால் மிகுதி வாக்குகள் 89 வீதமாகும். இந்த 89 சதவீதத்தில் அளிக்கப்பட்டுச் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகள் என்ற வகையிலேயே முதலாவது சுற்று வாக்கு கணக்கெடுப்பு இருக்கும்.
வாக்கு வீதம்
இதன்படி பகிஸ்கரிப்பதன் மூலம் எதிரி பதியப்பட்ட மொத்த வாக்குகளில் அளிக்கப்பட்ட குறைந்த வித வாக்குகளோடு இலகுவாக ஜனாதிபதியாக முடியும். அதன்படி பகிஸ்க்கரிப்பு என்பது வெற்றி பெறக்கூடிய ஒரு ஜனாதிபதியின் வாக்கு வீதத்தை அதிகரிக்க உதவியதாகவே அமையும்.
இதன் மூலம் தேர்தல்ப் பகிஸ்கிரிப்பானது வெல்லப்போகும் ஒரு சிங்கள ஜனாதிபதிக்கு திட்டவட்டமாக சேவை செய்யும் ஒரு முறையாகவே அமையும். உதாரணமாக பதியப்பட்ட மொத்த வாக்குகளை 100 என்று எடுத்துக்கொள்வோம்.
நாடு தழுவிய ரீதியில் மொத்தத்தில் 80 வீதத்தினரே வாக்களித்தனர் என்று எடுப்போம். அப்படியாயின் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 80. இதில் இரண்டு வாக்குகள் செல்லுபடி அற்றவை என்று எடுப்போம். எனவே அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் செல்லுபடியான 78 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.
இதில் 50 வீதம் என்பது 39க்கும் மேற்பட்ட வாக்குகள் ஆகும். அதன்படி 39 வாக்குகளுக்கு மேல் பெற்றவர் ஜனாதியாவார். இந்த அழிக்கப்பட்ட மொத்தம் 80 வாக்குகளில் தமிழரின் வாக்குகள் 10 என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்த 10 வாக்குகளையும் அளிக்காது பகிஸ்கரித்தால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 70 ஆகும்.
இந்த அளிக்கப்பட்ட 70 வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லுபடியற்றவை. எனவே செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் 68. இந்த 68 வாக்குகளில் 50 வீதம் என்பது 34 வாக்குகளுக்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் முதலாவது சுற்றிலேயே ஜனாதிபதியாக தெரிவாவார்.
அதாவது 39 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக வேண்டிய ஒருவர், பகிஸ்கரிப்பின் வாயிலாக 34க்கு மேலான வாக்குகளைப் பெறும் ஒருவர் இலகுவாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.
அதேவேளை சிங்கள தரப்பில் பலம்வாய்ந்த நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு அவருக்கு வாக்களிக்கப்படும் நிலையில் எந்த ஒரு சிங்கள வேட்பாளராலும் முதல் சுற்றில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறமுடியாது. அப்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாரும் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட மாட்டாது. பின்பு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிகழும். இதிலும் யாரும் 50சதவீத வாக்குகளைப் பெறக்கூடிய சூழல் இல்லை.
ஏனெனில் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு வாக்குகளை சிங்கள கட்சிகள் எதுவும் மக்களிடம் கோருவதும் இல்லை. கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் இப்படி இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவு வாக்குகளை அளித்த நடைமுறை அரசியல் வரலாறும் இல்லை. இந்நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் எந்த ஒருவரின் வாக்கு அளவிலும் மாற்றமேற்பட இடமில்லை.
ஜனாதிபதி பதவி
அதன் மூலம் இலங்கை அரசியல் யாப்பில் கூறப்படுகின்ற முதலாவது சுற்று, இரண்டாவது சுற்று ஆகிய இரண்டிலும் அறுதிப் பெரும்பான்மை (Absolute majority) பெறமுடியாது. அடுத்து அறுதிப் பெரும்பான்மையற்ற சாதாரண பெரும்பான்மை ( Simple majority ) வாக்குகளை மட்டும் கொண்ட ஒரு பலவீனமான ஜனாதிபதியே தெரிவாக முடியும்.
அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஜனாதிபதி என்ற அரசியல் யாப்பின் முதலாவது இரண்டாவது விருப்பங்களை இது தோற்கடித்து விடுகிறது. ஆதலால் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அளிக்கப்படும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பது சிங்கள அரசியலில் ஒரு அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதியை கொண்டுவர வழிவகுக்கும்.
மேலும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மலிந்திருக்கும் இலங்கை அரசியலில் ஓர் அங்கீகாரம் குறைந்த ஜனாதிபதி பதவிக்கு வருவது என்பது ஈழத் தமிழருக்கு சாதகமானது. எதிரி பலவீனம் அடைவது போராடும் இனத்துக்கு இலாபகரமானது. பகிஸ்கரிக்க கோருபவர்கள் ஒரு விடயத்தை கருத்திற் கொள்ளவேண்டும்.
அதாவது வேறு எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்காது சங்குக்கு மட்டும் வாக்களித்து கொள்வது பெரிய பகிஸ்கரிப்பாகும். தமிழ் வேட்பாளருக்கு முதலாவது வாக்கையளித்து இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குகளை சிங்கள வேட்பாளருக்கு அளிக்காதுவிட்டால் அது சாதாரண பகிஸ்கரிப்பை விடவும் ஓர் உயர்ந்த கட்ட பகிஸ்கரிப்பாய் அமையும்.
சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் இரண்டாம் மூன்றாம் விருப்பத்தெரிவு வாக்குகளை அளிக்காது சங்கு சின்னத்துக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கூறுகிறார். அதனால் சங்குச் சின்னத்தை ஆதரித்து அதற்கு மட்டுமே வாக்களித்து விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்காமல் விடுவது நேர்கணிய ரீதியான ஒரு பலம் பொருந்திய பகிஸ்கரிப்பாகும்.
இரண்டும் மூன்றும் கூட்டினால் ஐந்து ( 2 + 3 = 5 ), மூன்றில் இரண்டடை கழித்தால் ஒன்று ( 3 - 2 = 1 ) என்பது மூன்றாம் வகுப்பு எண் கணிதம் படித்த ஒரு குழந்தைக்குக்கூடப் புரியக்கூடிய கணக்கு.
இதனை தமிழ்த்தேசியம் பேசுவோர் புரியவில்லை என்றால் அவர்கள் சிங்களத்தடன் கள்ள உறவில் உள்ளார்கள் என்பதே அர்த்தம். இவற்றிற்கு அப்பால் தமிழர் தம்மை பலப்படுத்த பொது வேட்பாளர் பெரிதும் துணைபுரிகிறது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் பேராதரவுடன் அத்தேர்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 22 தமிழ் ஆசனங்கள் கிடைத்தன.
தமிழ் மக்கள்
இப்பின்னணியில் விடுதலைப் புலிகள் வெறுனே ஓர் ஆயுத இயக்கம் மட்டுமல்ல அது பரந்த மக்கள் ஆதரவை கொண்ட ஒரு இயக்கம் என்பதும் ஈழத் தமிழ் மக்கள் உறுதியான தேசிய அபிலாசைகளை கொண்டவர்கள் என்பதும் புலனாகியது.
ஆதலால் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தால் மட்டும் போதாது தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை அளிப்பதற்கு ஜனநாயக ரீதியான தமிழ் ஐக்கியத்தை சீர்குலைப்பதை தமது முதன்மையான இலக்காகக்கொண்டு முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் ஈழத் தேசிய ஐக்கியத்தை முதலில் கட்சி ரீதியாக சிதைக்கும் நடவடிக்கையை எதிரி மேற்கொள்ள தொடங்கினார்.
தமிழ் தேசியத்திற்கு இருந்த 22 ஆசனங்களை சுமாராக அரைவாசியாக வெட்டித் தறிப்பதில் எதிர் வெற்றியீட்டியுள்ளதுடன் தமிழ் தேசியம் பேசும் இருக்கக்கூடிய ஆசனங்களையே எதிரி பல கூறுகளாக உடைத்துள்ளார். இதன் மூலம் பலமற்றதாய் காணப்படுவது மட்டுமல்ல அது அழிந்து கொண்டு போகிறது என்ற ஓர் அரசியல் அலையை உள்நாடாட்டிலும், சர்வதேசத்திலும் ஏற்படுத்துவதில் எதிரிகள் அரைவழி வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தகைய சூழலில் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி, அதில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய சாதகமான சட்ட சூழலை பயன்படுத்தி அவரது நிர்வாகத்தில் நடக்கும் தேர்தலையே எமக்கு சாதகமான ஒரு களமாக மாற்றுவோம். தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு வரப்பிரசாதமாய் உள்ளது. ஈழத் தமிழரால் ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை ஒருபோதும் நடத்த முடியாது.
களநிலையில் அதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. ஆனால் எதிரியின் தேர்தலை பயன்படுத்தி தமிழ் மக்கள் அவாவுறும் தமிழ்த் தேசியம் - ஐக்கிய - ஒருமைப்பாடு என்ற மூன்றும் ஒன்று திரண்ட அரசியல் வாழ்வியல் பலத்தை வெளிக்காட்ட முடியும். நான் - நீ, அவன் - இவன், அது - இது என்று தன்முனைப்புக் கொண்டு எமக்கிடையே சண்டையிட்டுத் தமிழ் தேசியத்தை பலியிடாது, அது - இது என்று முட்டையில் மயிர்பிடுங்காது தமிழ்த் தேசியத்துக்கான ஒரு பொதுக் குரலாய் அனைவரும் ஒன்று திரண்டு ஒருமுகப்பட்டு சங்கச் சின்னத்தை முதன்மைப்படுத்தி பெருவெற்றி ஈட்ட வேண்டும்.
எதிலும் குறைபாடுகள் இருப்பது இயல்பு. ஒன்றுமே பூரணத்துவமாய் ஆரம்பிக்கப்படுவதில்லை. குறைபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அந்த வளர்ச்சி போக்கில் குறைகளை கடந்த முன்னேறும்.
மேலும் ஒரு தத்துவார்த்த கோட்பாடு உண்டு. அதாவது ஒரு விடயம் சம்பந்தமாக ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு செயல்பாடு புள்ளியில் அவை இரண்டு அணிகளாகவே பிளவுண்டிருக்கும். இதில் நடுநிலை என்பதும் செயற்படு அர்த்தத்தில் வெல்லும் பக்கமாகவே அமையும். எனவே நடுநிலை என்பதற்கு இங்கு இடமில்லை.
பொது வேட்பாளரை ஆதரிக்க மறுப்பது என்பது தமிழ் தேசியம் இல்லாவிடில் எதிர்பக்கம் என்கின்ற இரண்டு அணிகளுள் தமிழ் தேசியத்தின் எதிரியோடு கூட்டிச் சேர்வதாகவே அவையும்.
இதுதான் அரசியல் தத்துவம் சொல்லும் அடிப்படை உண்மை. ஈழத் தமிழ் மக்கள் ஐக்கியம் , ஒற்றுமை , ஒருமைப்பாடு என்ற உன்னதமான தேசிய அபிலாசையை சொல்லிலும், செயலிலும், தோற்றத்திலும் காட்சிப்படுத்தக்கூடிய வகையில் முன்னிறுத்த வேண்டும். அந்த வகையில் பொது வேட்பாளரை ஆதரித்து அதனை முன்னெடுப்பதானது முள்ளிவாய்க்காலுக்கு பின்னானகால வீழ்ச்சியில் இருந்து எழப்போகிறோம் என்ற செய்தியை பறைசாற்றுவதாகும்.
பேரினவாத ஒடுக்குமுறையால் மூன்று இலட்சம் அப்பாவி மக்களை இழந்துள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வரையிலான குழந்தைகள், தாய்மார் கர்பிணித்தாய்மார், பெண்கள், நோயாளிகள், முதியோர், இளையோர் என இனப்படுகொலைக்கு உள்ளானபோதிலும், 3, 46,000 இராணுவ இரும்பு சப்பாத்திக்கு கீழும், விதைத்து விட்டார் போல் இருக்கும் மேலதிக பொலிஸ் படைகளின் ஒடுக்கு முறைகளுக்கு கீழும்„ பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வுப் படைகளின் கழுகுச் செயற்பாடுகளில் கீழும், எதிரியினாலும் எதிரிக்கு சேவகம் செய்யும் தமிழ் தலைவர்களினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சின்ன பின்னமாய் உடைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மக்கள் தம் தேசிய அபிலாசையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் இழக்கத் தயார் இல்லை என்பதை உள்நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் காட்ட , தம்பலத்தை தாம் உணர்ந்து முன்னேற தமிழ் பொது வேட்பாளரை பெரு வெற்றியடையச் செய்ய வேண்டும். சங்கை தமிழ் தேசியத்தின் நாதமாய் ஒலித்துக் காட்ட வேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 23 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.