இராணுவ விவகாரங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவ தலைவர் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
1998இல் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பாக செயறபடுவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நோர்வேயை அணுகினார். ஏனைய நாடுகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர்.
எனினும் நோர்வே தொலைதூர நாடாக காணப்பட்டதாலும் இலங்கை குறித்து தனிப்பட்ட நலன்கள் இல்லாததன் காரணமாகவும் இரு தரப்பினாலும் ஏற்று கொள்ளப்பட கூடியதாக காணப்பட்டதாலும் அவர்கள் நோர்வேயை தெரிவு செய்தனர்.
நோர்வே என்பது இந்தியாவிற்கும் இலங்கை விவகாரங்களில் தொடர்புபட்டிருந்த முக்கிய வெளிநாடுகளிற்கும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நாடாக காணப்பட்டது. முதல் இரண்டு வருடங்கள் அனைத்தும் கொழும்பில் இரகசியமாக இடம்பெற்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் சமாதான முயற்சிகள் தொடர்பில் என்ன நடைபெறுகின்றது என்பது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கும் மாத்திரம் தெரிந்திருந்தது.
2000ஆம் ஆண்டு சந்திரிகா தாக்கப்பட்டு கிட்டத்தட்ட கொலை செய்யப்பட்டார் அதன் பின்னர் அவர் எங்களின் பங்களிப்பு குறித்து பகிரங்கப்படுத்தினார்.
2001 - 2002இல் நாங்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம். முதல் இரண்டு வருடங்கள் அது மிகவும் வெற்றிகரமானதாக காணப்பட்டது எவரும் கொல்லப்படவில்லை. ஒஸ்லோ உடன்படிக்கை குறித்த இணக்கப்பாடு காணப்பட்டது.
அது இலங்கை பிரச்சினைக்கு இரு தரப்பும் சமஸ்டி உடன்படிக்கையை ஆராய வேண்டும் என தெரிவித்தது. இது இடம்பெற்ற வேளை விடுதலைப் புலிகள் மிகவும் பலமான நிலையிலிருந்தனர்.
பலர் விடுதலைப்புலிகள் பலவீனமாக இருந்ததன் காரணமாகவே சமாதானப்பேச்சுவார்த்தைக்குள் இழுத்து வரப்பட்டனர் என தெரிவித்தனர்.
ஆனால் ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் அவர்கள் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நிலையிலிருந்தனர். விமான நிலையம் மீதான தாக்குதல் இலங்கை பொருளாதாரத்தின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் மிகவும் பலமாகயிருந்த வேளையே சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். மெல்லமெல்ல சமாதானப் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சி காணத் தொடங்கின.
இருதரப்பும் மற்றைய தரப்பை இலக்குவைக்க தொடங்கின. ஆனால் விடுதலைப்புலிகள் அரசாங்கத்தை விட அதிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மகிந்த அதிகாரத்திற்கு வந்ததும் வீதியோர வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் அவரது ஜனாதிபதி பதவியை பலவீனப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகள் முயன்றனர்.
ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதளபதி ஆனால் அரசியல் தலைவரில்லை.
அவர் அனைத்து தவறுகளையும் செய்ய தொடங்கினார். பாரம்பரிய இராணுவத்தை போல செயற்பட தொடங்கினார் என குறிப்பிட்டுள்ளார்.