கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் யார்! சஜித் தரப்புக்கு புதிய சிக்கல்
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிக்க பல எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன இருப்பார் என்ற ஊகங்கள் இருந்தபோதிலும், அவர் போட்டியிடுவதற்கான நிலைப்பாட்டில் இல்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக ஒரு முக்கிய முஸ்லிம் நபரைக் கண்டுபிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் சஜித் தரப்பு ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபை
கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை அவரே அறிவிக்க வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் முடிவு செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கொழும்பு மாநகர சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி 60 உறுப்பினர்களை வென்று தனது அதிகாரத்தை பலப்படுத்தியது,
அதே நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23 உறுப்பினர்களை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 12 உறுப்பினர்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 10 உறுப்பினர்களைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது.
ஜே.வி.பி 6 உறுப்பினர்களையும், ஐக்கிய கூட்டணி 2 உறுப்பினர்களையும் பெற்றது.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இலங்கை தேசிய சக்தி கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனமும் , ஒரு சுயேச்சைக் குழுவிற்கு இரண்டு ஆசனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |