சமத்துவ வார்த்தைகளால் சரித்திர ரீதியான இனப்பிரச்சினையை மறைக்க முடியாது: ஸ்ரீநேசன் எம்.பி
சமத்துவ வார்த்தைகளால் சரித்திர ரீதியான இனப்பிரச்சினையை மறைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
நேற்று (27.04.2025) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியினர் சமத்துவம், சமவாய்ப்பு, சமரசம், சகோதரத்துவம் பற்றியெல்லாம் அழகாகக் பேசுகின்றனர். தம்மிடம் அடிப்படைவாதம் இல்லை என்கிறார்கள். ஆனால் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை மறந்தும் மறைத்தும் விடுகின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தி
இனிக்கப்பேசி, இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினையை தமிழர்கள் மறக்கச்செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் சிங்களத் தலைவர்களின் ஒடுக்கு முறை,ஒழிப்பு முறைகளை ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.இன அழிப்பு முறையை சர்வதேசத்திடம் மறைப்பதற்கான இராஜதந்திர முறைகளை தேசிய மக்கள் சக்தியினரும் கையாளுகின்றனர்.
இறுதி யுத்த மனிதப் பேரவலத்தினை இன அழிப்பினைக் கண்டு கொள்ளக்கூடிய சர்வதேசப் பொறிமுறை மூலமான விசாரணையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் எதிர்க்கின்றது.
யுத்தம் முடிந்து 16 ஆண்டுகளாக செயலற்றுப் போன உள்நாட்டுப் பொறிமுறையினையே தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக வலியுறுத்தியுள்ளார்.
ஆயின் தேசிய இனப்பிரச்சினையையும் அதன் விளைவாக ஏற்பட்ட அழிப்புகளையும் சமத்துவப் பேச்சினால் மூடி மறைப்பதுதான் தேசியமக்கள் சக்தியின் தந்திரோபாயமாக அமைந்துள்ளது. அதேவேளை தமிழர்களின் பிரச்சினைகள் என்பது அபிவிருத்தியோடு மாத்திரம் தொடர்புபட்டதாக தேசிய மக்கள் சக்தி காட்டிக் கொண்டு வருகின்றது.
வீதிகள், பாலங்களை அமைத்தல் மற்றும் இதர சில வேலைப்பாடுகளால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மறைத்து விட தேசிய மக்கள் சக்தி நினைக்கிறது. அதற்கான முகவர்களாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து தமது கட்சி சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
இனப்பிரச்சினை
இந்நிலையில்,வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால்,'நாடும் நமதே ஊரும் நமதே' என்று இந்த அரசாங்கம் முழக்கமிட வாய்ப்புள்ளது.
உள்ளூராட்சி சபைகள் மூலமாகவும் தமிழ் மக்களிடம் இருந்து முகவர்களைப் பெற்றால்,தேசிய இனப்பிரச்சினையை மறைப்பதற்கு மேலும் வாய்ப்புக்கிடைக்கலாம் என்று இன்றைய அரசாங்கம் கருதுகின்றது.
எனவே, வடக்கு,கிழக்கு மாகாண வாக்காளர்கள் கவனமாக இருந்து தமிழரசுக் கட்சிக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும். நேரடியான இனவாதத்தைக் கண்டு கொள்ள முடியும்.
தேசிய இனப் பிரச்சினையை தமிழ் முகவர்களாலும், அபிவிருத்தி மாயையாலும் மறைக்கின்ற அடிப்படை வாதம் ஆபத்தானது.தமிழ் வாக்காளர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயலாற்ற வேண்டும்.
வெள்ளம் வரும் முன் அணை கோல வேண்டும். தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்.சரியாகத் தமது அரசியல் கடமைகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |