இனி தாமதம் வேண்டாம்! மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துமாறு EPRLF அதிரடி வலியுறுத்தல்
மாகாண சபைத் தேர்தலைத் தாமதமின்றி உடனடியாக நடத்துவதற்கும், மாகாண சபைகளின் அரசமைப்பு அந்தஸ்தையும் அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்கும் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு
அங்கு அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்:- "இலங்கையில் மாகாண சபை முறைமையானது 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்' அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.
இந்த முறைமைக்கான அரசமைப்பு அங்கீகாரமும் அதிகாரங்களும் இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டன.

மாகாண சபை முறைமை என்பது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப் போராட்டத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட முக்கியமான அரசமைப்பு ஏற்பாடாகும். அது வெறுமனே நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பல்ல. மாறாக, அதிகாரங்களை மாகாண மட்டத்துக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்குக் கொண்டுவரப்பட்ட அமைப்பாகும்.
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமை, நடைமுறைப்படுத்தப்பட முடியாத சட்ட சிக்கல்களால் தேர்தல்களை நீண்டகாலமாக முடக்கி வைத்துள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலை நீடிப்பது ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பரிந்துரைகள்
01. சட்ட முடக்கத்தை நீக்குதல்: 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை மீளாய்வு செய்து, அதனால் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் முடக்கநிலையை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
02. மாவட்ட விகிதாசார முறையை மீளமைத்தல்: சிறுபான்மையினரின் வாக்குப் பலத்தைச் சிதறடிக்காத வகையில், 2017ஆம் ஆண்டின் திருத்தத்துக்கு முன்னர் நடைமுறையிலிருந்த மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல்.
03. தேர்தல் கால அட்டவணை: மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றி, தேர்தல்களைத் தாமதமின்றி நடத்துவதற்கான கால அட்டவணையை அறிவித்தல்.

04.பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம்: நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவம் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகின்றதோ, அதே முறைமையை மாகாண சபைக்கான தேர்தல் முறைமையிலும் கடைப்பிடித்தல்.
05. 13ஆவது திருத்த அதிகாரங்களைப் பாதுகாத்தல்: 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் அவற்றின் சட்டவாக்க அந்தஸ்தையும் எவ்விதத்திலும் பலவீனப்படுத்தாமல் பாதுகாத்தல்.
மாகாண சபைகள் வலுப்பெறுவது ஜனநாயகம் வலுப்பெறுவதற்கான வழியாவதுடன், அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்படுவது தேசிய நல்லிணக்கத்துக்கான அடித்தளமாகவும் அமையும் என குறிப்பிட்டுள்ளார்.