மட்டக்களப்பு மாவட்ட செயலக வீதியிலுள்ள குப்பைகளை அகற்றுமாறு ஈ பி டி பி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் அதிகரித்த குப்பை கூழங்களினால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப் பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளதாக ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வீதியின் இரு பக்கமும் கொட்டப்பட்டுள்ள இந்த குப்பைகளை அகற்ற மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று(31) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
கழிவு அகற்றல்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த வீதியில் இரு பகுதிகளிலும் தகரங்கள் மற்றும் வீட்டு கழிவுகள் உட்பட குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த குப்பைகளை மாதக்கணக்கில் அகற்றப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் மாவட்ட செயலகத்திற்கு செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு இந்த வட்டாரத்துக்கு தெரிவான உறுப்பினர் இது தொடர்பாக கவனம் செலுத்தாமல் உள்ளதுடன் அவர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றி பெற்றால் வாங்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
வடிகால்களை துப்பரவு செய்தல்
வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் வாக்களித்த மக்களுக்காவது குறைந்த பட்சம் புதிய மாவட்டத்திற்கு செல்லும் பாலமீன்மடு வீதி இரு பக்கமும் உள்ள குப்பைகளை அகற்றிக் கொடுங்கள்.

அதேவேளை வடக்கு கிழக்கில் பருவபெயர்ச்சி மழை ஐப்பசி மாதத்தில் இருந்து பெய்ய தொடங்கும். நேபாளத்தில் இன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்று இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மழை வரும் முன்னர் இந்த மழைநீர் வழிந்தோடும் வடிகால்களை மாநகரசபை துப்பரவு செய்ய வேண்டும் இல்லாவிடில் மழை வெள்ளத்தில் பாலமீன்மடு கிராமம் பாதிக்கப்படும் என கோரிக்கை விடுத்துள்ளார்.