யாழ். திருவள்ளுவர் சுற்று வட்டப் பாதையில் ஏற்படும் மழைக்கால இடையூறு(Photos)
யாழ்பாணத்தின் பிரதான தபாலகம் முன்பாக திருவள்ளுவர் சுற்றுவட்டப்பாதை அமைந்துள்ளது.
AB16 வீதியும் யாழ்.கோட்டை சுற்று வீதியும் இணைந்து இந்த சுற்றுவட்டப்பாதையை ஆக்குகின்றது.
சுற்றுவட்ட மையத்தில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.
யாழ். கோட்டையினை சுற்றியமைக்கப்பட்டுள்ள பாதையின் வட்ட ஒழுங்கில் உள்ள இரண்டு சுற்றுவட்டப்பாதைகளில் அதிக போக்குவரத்தினை கொண்ட சுற்று வட்டப்பாதையாக இது அமைகின்றது.
AB 21 பாதையுடன் AB 19 பாதை இணையும் சந்தியையும் திருவள்ளுவர் சுற்று வட்டப்பாதையையும் இணைக்கும் படி யாழ்.கோட்டை சுற்றுவட்டப்பாதை அமைகின்றது.
இந்த இரண்டாவது சுற்று வட்டப்பாதையில் நாகபூசனியம்மன் சிலை அமைந்துள்ளது.
மழைக்கால இடையூறு
திருவள்ளுவர் சுற்று வட்டப் பாதையிலிருந்து நாகபூசனியம்மன் சுற்று வட்டப்பாதைக்கு செல்லும் போது உள்ள பாதையில் ஆரம்பப் பகுதியில் மழைக்காலங்களில் அதிக நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துவிடுகின்றது.
மழையற்ற பொழுதுகளில் சுத்தமாகவும் போக்குவரத்துக்கு இலகுவாகவும் இருக்கும் இந்த இடம் மழை பொழியும் பொழுதுகளில் நீர் தேங்கி வழிந்தோடாது அசுத்தமாவதோடு போக்குவரத்துக்கும் இடையூறாகவும் காணப்படுகிறது.
உரிய தரப்பினர் இது தொடர்பில் கூடிய கவனமெடுத்து இந்த இடர்தரும் சூழலை களைந்துவிடும் செயற்பாட்டை முன்னெடுப்பது போக்குவரத்தினை இலகுவாக்குவதோடு, இந்த இடமும் எழிலுறும் என்று தங்கள் கருத்துக்களை சுற்றுலாப் பயணிகளில் சிலர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தனியார் பேருந்து நடத்துநர்களிடம் கருத்து கேட்கும் போது, “நீர் வடிந்தோடும் ஒரு வழி இருந்தால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்காது.
எனினும் இது பற்றிய சரியான செயற்பாடுகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படாதது கவலையளிக்கின்றது” என குறிப்பிட்டுள்ளனர்.
நீர் தேங்கி நிற்கும் சூழல்
பாதசாரிகள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கும் மோட்டார் சைக்கில் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பயனிப்போருக்கும் இந்த இடத்தில் நீர் தேங்கி இருப்பது இடையூறாக இருக்கின்றது என அவதானிப்பாளர்கள் பலர் குறிப்பிடிருந்ததும் நோக்கத்தக்கது.
இத்தகைய சிறிய தவறுகளைக் கூட சீர் செய்யாது கடந்து போகும் போது அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் வேளைகளில் அதிக நீர் வடிந்தோடாது தேங்கி நிற்கும் சூழல் தோன்றும்.
இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதிக அழிவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். இதன்போது அவசர அவசரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதிலும் பார்க்க இப்போதே இவற்றை சீர்செய்து கொள்ள முயல வேண்டும் என வீதியமைப்பு திட்டமிடல் துறையில் பணியாற்றிவரும் பொறியியலாளர் ஒராவரிடம் கருத்துக் கேட்ட போது கூறியுள்ளார்.
இது போன்ற பல இடங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதிகளுக்கான வீதியபிவிருத்தி திணைக்களத்தினர் நீர் வடிந்தோடும் வகையில் உடனடிச் செயற்பாடுகளை மேற்கொண்டால் எதிர்வரும் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




