பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பு அவசியம்- ரூபவதி கேதீஸ்வரன் (VIDEO)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (29) ஐக்கிய நாடுகள் பெண்கள் வலையமைப்பு chrysalis நிறுவனத்தினால் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வியாபார சந்தையும் அனுபவ பகிர்வும் என்ற தொனிப்பொருளின் கீழ் குறித்த கண்காட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதம விருந்தினராக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார பாதிப்பு
இது தொடர்பாக மேலும் உரையாற்றுகையில்,
"கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் காரணமாக எமது பொருளாதார நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழில் முயற்சிகளும் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது, சுய தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை காணப்படுகின்றது. ஆகவே, தொழில் முயற்சியாளர்களாகிய நீங்கள் உங்களுடைய தொழில் முயற்சிகளை கைவிடாது அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
எமது மாவட்டத்திற்கும், எமக்கும், நாட்டுக்கும் ஏற்படுகின்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு உங்களுடைய பங்களிப்புகளும் மிக அவசியமானது” என குறிப்பிட்டுள்ளார்.




