திருகோணமலையில் இடம்பெற்ற தொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்திக் குழுவை நிறுவும் நிகழ்வு!
திருகோணமலை மாவட்டத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்திக் குழுவை நிறுவும் நிகழ்வு மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, இன்று (07) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வு
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றும், உள்ளூரில் பொருட்களை விற்பனை செய்யும் தொழிற்முயற்சியாளர்கள் ஏற்றுமதி தொழில் முயற்சியாளர்களாக வளர வேண்டும் என்றும், பிராந்திய ரீதியாக பொருட்களை விற்பனை செய்யும் தொழில் முயற்சியாளர்கள் தங்கள் தற்போதைய மட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு ஒரு படி முன்னேற வேண்டும் என்றும் இதன்போது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கூறினார்.
மாவட்டத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழிற்முயற்சியாளர்களின் சிக்கல்களை தீர்த்து வைத்தல், மாவட்டத்தின் தொழிற்முயற்சி சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களின் சேவைகளை ஒன்றிணைப்பதன் ஊடாக மிகவும் பரந்த மற்றும் வினைத்திறனான சேவைத் தொகுதியொன்றை தாபித்தல், சந்தைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, புதிய தொழிற்முயற்சியாளரை ஊக்குவித்தல், ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் இசட்.ஏ.எம். பைசல், திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் என். பிரளணவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




