யாழ்.மாநகர முதல்வர் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான கனேடிய தூதுவருக்கிடையில் சந்திப்பு (VIDEO)
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்ஸ் வோல்ஸ் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணம் மாநகரத்தின் செயற்பாடுகள், முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டதுடன் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடைத்திட்டம்
குறிப்பாக மாநகரத்திற்கான பாதாள சாக்கடைத்திட்டம் ஒன்று முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், இது தொடர்பில் கனடா டொரொன்டோ மாநகர முதல்வருடன் ஏற்கனவே 3 வருடங்களுக்கு முன்பு கதைத்திருந்த விடயம் தொடர்பாகவும், அவை நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 அசாதாரண நிலைமைகள் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாமல் தடைப்பட்டதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை மீள ஆராய்வதற்கான நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை கனடா டொரொன்டோ மாநகரத்தின் ஊடாக பெற்றுத்தருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது முதல்வரின் கருத்தை உள்வாங்கிக்கொண்ட தூதுவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஏற்படுத்தப்படும் தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும், மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் முதல்வர் தூதுவரிடம் விளக்கியுள்ளார்.
கனடா நாட்டின் தூதுவராலயம்
மேலும் யாழ்ப்பாணத்தில் கனடா நாட்டின் தூதுவராலயத்தின் அலுவலகமொன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு முதல்வர் தூதுவரிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.
குறித்த விடயம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது என்றும், இது குறித்து தான் பரிசீலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் மாநகர ஆணையாளர், செயலாளர் மற்றும் இலங்கைக்கான கனடா தூதுவராலயத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம்
இதேவேளை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேன்கொண்டிருந்தார்.
கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே கனேடியத் தூதுவர் தலைமையிலான குழு பல்கலைக்கழகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி எஸ். கே. கண்ணதாஸ ஆகியோருடனும், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை மாணவர்களுடனும் கனேடியத் தூதுவர் கலந்துரையாடி, நிலைமைகளைக் கேட்டறிந்தார்.