மறுஅறிவித்தல் வரை மூடப்படும்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்த வேளைகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் திணைக்கள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2.5 மீற்றர் வரை உயரும் கடல் கொந்தளிப்பு
இதன் காரணமாக, இந்த வான்பரப்பு மற்றும் கடல் எல்லைகளுக்குள் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்றொழிலாளர்கள் சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கல்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.