நாட்டு மக்களுக்காக பதில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (16) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நிவாரண வரவு செலவு திட்டம்
ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் நிவாரண வரவு செலவு திட்டத்தில் இருந்து கூடுதல் தொகையை இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக் கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துமாறு செயல் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கு இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலின் போது வர்த்தகர்கள் தமது தொழிலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட திட்டம்
இதேவேளை, அமைதியான போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட திட்டம் நல்ல திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.