ரணிலை ஆதரிக்கும் முடிவு எந்தக் கொள்கையின் அடிப்படையிலானது! மகிந்த தரப்புக்குள் வெடித்த சர்ச்சை
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திற்கு, கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
விளக்கம் கோரியுள்ள பீரிஸ்
பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த விளக்கத்தை பீரிஸ் கோரியுள்ளார்.
கட்சியின் வேட்பாளரான டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி நிலைக்கு பொருத்தமானவர் என்ற நிலையில், ஏன் வெளியக வேட்பாளரான ரணில் விக்ரமசிங்வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பீரிஸ், சாகர காரியவசத்திடம் வினவியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
- எந்த அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இந்த முடிவை எடுப்பதற்கு யார் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
- எந்த அடிப்படையின் கீழ் இந்த நபர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
- இந்த கூட்டம் நடைபெற்ற இடம், நேரம், திகதி.
- இந்த கூட்டம் தொடர்பான தகவல்கள் எவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்த கொள்கைகளுக்கு கீழாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற வினாக்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
இது ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவை வெளிக்கொண்டு வந்துள்ளது.
எனினும்
காரியவசம் மற்றும் பீரிஸ் ஆகியோர் வசம் தனித்தனியே உள்ள ஆதரவு நாடாளுமன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.