இலங்கையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு ஆபத்து - பொலிஸார் வெளியிட்ட தகவல்
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காகவே அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியதன் முதன்மையான நோக்கம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவித இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான அறிக்கைகளை பகிர்வதும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகும் என சட்ட வழிகாட்டலுக்குப் பொறுப்பான குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்டவிரோதமாக செயற்படும் எவரையும் வெளியேற்றும் அதிகாரத்தையும் இந்த சட்டம் முப்படையினருக்கும் இராணுவத்தினருக்கும் வழங்குவதாக அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரங்களைப் பொருத்தவரை ஒருவரை கைது செய்து 24 மணி நேரத்தில் மன்றில் ஆஜர் செய்ய வேண்டியது சாதாரண சட்ட விதிமுறையாகும். எனினும் அவசரகால சட்டத்தின் கீழ் ஒருவரை 72 மணி நேரம் வரை நீதிமன்றில் ஆஜர் செய்யாமல் விசாரிக்கும் உரிமை பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உள்ளது.
அத்துடன் 3 நாட்களில் விசாரணைகளை முடித்து சந்தேக நபரை ஆஜர் செய்ய முடியாவிட்டால், அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சந்தேக நபர் ஒருவரை மன்றில் ஆஜர் செய்யாது 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.



