யானைகளை வெளியேற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுப்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்துள்ள யானைகளை வெளியேற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்து வருகின்றது.
யானைகளை விரட்டும் நடவடிக்கை
இந்த நிலையில் நேற்று மாலை தேற்றாத்தீவு கிராமத்திற்குள் நுழைய முயன்ற யானை கூட்டங்களை விரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வெல்லாவெளியில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் தே.வினோராஜ் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
பிரதேச மக்கள் கவலை
கடந்த ஒரு வாரத்தில் தேற்றாத்தீவு பகுதியில் அதிகளவான சேதங்களை யானைகள் ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் யானைகளை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தேற்றாத்தீவு பகுதியிலிருந்த யானை கூட்டங்களை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




