தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்!
வடக்கு, கிழக்கில் பல இடங்களில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று(21) நடைபெற்று வருகின்றன.
புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழர்களின் உரிமைக்காக, தமிழீழ இலட்சியத்துக்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூர்ந்து தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நவம்பர் 21 முதல் 27 வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம்
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகள்வுகள் இன்று(21) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.

தேச விடுதலைக்காக கள முனையில் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று 21 ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.
நிகழ்வுகள்
இதனிடையே நாளை காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
வலிகாமம்
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் உணர்வு பூர்வமாக மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
சபையின் ஏற்பாட்டில் மானிப்பாய் நகர் முழுவதும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டதுடன் சபை அலுவலகம் முன்பாகவே விசேடமாக அமைக்கப்பட்ட வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் சபைக்கு பிரசன்னமான உறுப்பினர்கள் அங்கும் அஞ்சலி செலுத்தினர்.
பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்களில் ஈ.பி.டி.பி சார்பில் இருவரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரும் மாத்திரமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
வடமராட்சி
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு இன்று காலை 9:00 மணியளவில் சுப்பர் மடம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது.
குருதியினை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை குருதி வங்கி பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம் பெற்றன. இதில் பருத்தித்துறை நகரசபை சபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல், மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
உடுத்துறை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வார நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இன்றைய மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கொக்கட்டிச்சோலை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கனடா வாழ் உறவுகளின் பேராதரவுடன் மாவீரர் பெற்றோர்கள், மாவீரர் குடும்ப உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு இன்றைய தினம் கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர்கள், குடும்ப உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாவீரர் பெற்றோர்கள் குடும்ப உறவுகள் மங்கல வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரப்பட்டதுடன், தமிழ் மக்களின் அடிப்படை உரிமை மற்றும் அரசியல் அபிலாசைகளை முன்நிறுத்தி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் முகமாக இரண்டு மாவீரர்களை ஈன்ற தாய் ஒருவரால் பிரதான ஈகைச் சுடரேற்றப்பட்டது.
பின்னர், மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு விருந்தோம்பும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், பழமரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான இன்று (21.11) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் (21.11.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது மாவீரர்களின் உரித்துடையோர்கள் , ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற எங்களுக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்த்திகை 27 இதே முல்லைத்தீவு கடற்கரையிலே நடைபெற இருக்கின்றது.

குறித்த கடற்கரை கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குரியதாக இருக்கின்றதனால் கடற்கரையை பயன்படுத்துவதற்கு பிரதேச சபையின் தபிசாளரிடம் முன் அனுமதி பெற்றிருக்கின்றோம்.
கார்த்திகை 25,26,27 ஆகிய மூன்று நாட்களும் கடற்கரையில் நாங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே அனைவரும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் இவ் நாளில் வருகை தந்து நினைவஞ்சலியை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.






