மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
கடந்த முதலாம் திகதி முதல், அமைச்சரவை அனுமதியளித்த மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மின் கட்டண திருத்தம்
“மின் கட்டண திருத்ததிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் அந்த புதிய மின் கட்டண திருத்தம் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய மின் கட்டண திருத்தத்தின் கீழ், 0 முதல் 30 வரையான வீட்டு மின் அலகுகளுக்கான நிலையான கட்டணம் 400 ரூபாவாகவும், 30 முதல் 60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 550 ரூபாயாகவும் உயரும்.
புதிய மின் கட்டண திருத்த முன்மொழிவின்படி, 60 முதல் 90 வரையாக அலகுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 650 ரூபாவாகுவும், 90 முதல் 180 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1500 ரூபாவாகவும் உயரும்.
180 மின்சார அலகுகளுக்கு மேல் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிலையான கட்டணமாக 2000 ரூபா அறவிடப்படும்” எனவும் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்
இதேவேளை, கைத்தொழில்களுக்கான மின் கட்டண அதிகரிப்புக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.