நாடு முழுவதும் மின்சார விநியோகம் இன்றும் தடைப்படும்
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் உரிய முறையில் கிடைக்கவில்லை எனின் இன்றைய தினமும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையான இன்று மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும் என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் இன்றிரவு தடையில்லா மின்சாரத்தை வழங்க சிக்கல் ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் நேற்று பிற்பகல் எரிபொருளின்றி செயலிழந்ததாகவும், சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் இன்று காலை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவ, களனிதிஸ்ஸ மின் நிலைய வளாகத்திலுள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும், மத்துகம மற்றும் துல்ஹிரிய ஆகிய இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளின்றி செயலிழந்த நிலையில் காணப்படுகின்றன.
அதற்கமைய இன்றைய தினமும் இரண்டு கட்டங்களாக மின் உற்பத்தி தடைப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இதன் முதல் இரு கட்டத்தின்கீழ், நேற்று பிற்பகல் 2.30 முதல் 6.30 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஒரு மணித்தியாலத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக நேற்று மாலை 6.30 முதல் இரவு 10.30 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 45 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குத் தங்களுக்கு அவசியமான எரிபொருள் கையிருப்பைப் பெற்றுக்கொள்வதற்கான முறைமை, இலங்கை மின்சார சபையால் தயாரிக்கப்பட வேண்டும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார சபைக்கான எரிபொருள் கையிருப்பைப் பெற்றுக்கொள்வதற்காக, லைக்கோ
நிறுவனத்திடமிருந்து, 250 மில்லியன் ரூபா கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்குத்
தாம் தலையீடு செய்வதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.