இன்று முதல் பாரிய தொகையால் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்
பல்வேறு இழுபறிக்கு மத்தியில் இன்று முதல் 66 வீதத்தால் மின் கட்டண அதிகரிப்பிற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய 03 உறுப்பினர்களின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு மேலதிகமாக 287 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டும் நோக்கில், அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்ட 66% மின் கட்டண அதிகரிப்பு யோசனை கடந்த மாதம் 02 ஆம் திகதி இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணத்திற்கு இதுவரை நடைமுறையிலிருந்த 680 ரூபா கட்டணத்தொகை 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய கட்டணத் திருத்தத்திற்கு அமைவாக, 30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றுக்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம் 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும். இது 261% அதிகரிப்பாகும்.
90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையைக் கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண திருத்தத்தின் கீழ் சாதாரணமாக வீடொன்றில் பயன்படுத்தப்படும் மின்சாரம், 900 அலகிற்கான பிரிவிற்குள் உள்ளடங்கி, மின் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.