மின்வெட்டு தொடர்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை
தொடரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கம் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.
இதற்காக, தனியார் துறையினரிடமிருந்து ஆறுமாத காலத்திற்கு நாளாந்தம் 100 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடரும் வறட்சியான காலநிலை இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு துறைகளிலும் கடும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
தனியார் துறையிடம் மின் கொள்வனவு
மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 31% ஆக குறைந்துள்ளது. சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 16% இலிருந்து 7% ஆக குறைந்துள்ளது.
நீர்மின் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நுரைச்சோலை மின்நிலையத்தின் ஒரு பிரிவு தொழில்நுட்ப பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், அரசாங்கம் அவசரமாக மின்சாரத்தை தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ள அதேவேளை, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நட்ட ஈட்டை வழங்கவும் தீர்மானித்துள்ளது.
அடுத்த மாதம் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீர்மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதால் தேவை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள இலங்கை மின்சாரசபை நாளாந்தம் 150 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மின்வெட்டு
அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின் தென் மாகாணத்தில் சுமார் 10 நாட்களுக்கு இரண்டு மணித்தியால மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர் நந்திக பத்திரகே குறிப்பிட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |