கொழும்பில் அறிமுகமாகும் மின்சார தொடருந்து சேவை
கொழும்பு புறநகர் தொடருந்து திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மின்சார தொடருந்து சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் தொடருந்து சேவையை நவீனமயப்படுத்துவது மற்றும் அது தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
மின்சார தொடருந்து சேவை
அதற்கமைய, இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், களனி தொடருந்து பாதையில் மருதானையிலிருந்து மாக்கும்புர வரையிலும், பிரதான தொடருந்து பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம வரையிலும், கடலோரப் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையிலும் மின்சார தொடருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன், இத்திட்டத்திற்கான நிதிகளை பெற்றுக்கொள்வது மற்றும் இதனைச் செயற்படுத்தும் போது ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போதுள்ள தொடருந்து சேவைக்கு இணையாக மின்சார தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதுடன், தொடருந்து பாதைகளில் தற்போது காணப்படும் அகலப் பாதை முறைமைக்கு பதிலாக சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் முறைமையைப் பயன்படுத்தி தொடருந்து பாதைகளைப் புனரமைப்பது தொடர்பிலும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.
இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.