தேர்தல் தொடர்பான சர்ச்சைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்காது!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது என்று அறிவித்துள்ளது.
ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றும், அடுத்த ஆண்டிலேயே அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
அத்துடன் அரசியல் கட்சியொன்றின் செயலாளர் எவ்வாறு தேர்தல்களுக்கான திகதிகளை நிர்ணயம் செய்ய முடியும் என்று பல்வேறு தரப்பினரும் பரவலாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவிடம் கருத்து கேட்டபோது,அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.