இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவு: சிறீதரன் வெளிப்படை
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளியின் கோரிக்கைக்கு முதல் நாளிளேயே பதில் வழங்கியதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வழக்காளி கோரிய நிவாரணத்தினை வழங்கி, வழக்கினை கைவாங்குவதாக, விசாரணைக்கு எடுத்த முதல் நாளிலேயே அறிவித்துவிட்டோம் என சிறீதரன் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், கட்சியில் ஏற்படுத்திய இணக்கப்பாட்டின் அடிப்படையில் பதில் சமர்ப்பணங்கள் ஒரே நாளில் செய்யப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு கட்சி மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தபோதும், கடந்த 19ஆம் திகதியில் மீண்டும் 11 நாட்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நால்வர் பதில் சமர்ப்பணங்களை செய்யாமைக்கான காரணம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள வழக்காளியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவருக்கான நிவாரணத்தினை அளிப்பதாக கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி இவ்வழக்கு முதன்முதலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நாம் நீதிமன்றுக்கு அறிவித்துவிட்டோம்.
அதன் பின்னர் இடையீட்டு மனுதாரர்கள் கொண்டுவரப்பட்டார்கள். தொடர்ச்சியாக கட்சிக்குள் அதுபற்றி கலந்துரையாடினோம்.
அந்த வகையில் கட்சியினை நீதிமன்றில் இருந்து விடுவிப்பதற்காக எனது தலைமைத்தெரிவு உள்ளிட்ட கட்சியின் மூலக்கிளை தெரிவு முதல் அனைத்து பதவி நிலைகளையும் மீண்டும் மேற்கொள்வதற்கும் இணக்கம் வெளியிட்டிருந்தேன்.
பதில் சமர்ப்பணங்கள்
இந்நிலையில், வவுனியாவில் அரசியல் உயர்பீடம் கூட்டப்பட்டு பதில் சமர்ப்பணங்கள் தொடர்பில் உரையாடல்கள் நடைபெற்றது. அந்த வகையில் எதிராளிகள் சார்பில் பதில் சமர்ப்பணங்கள் செய்யப்படும் என்ற இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.
அந்த அடிப்படையில் நான்கு எதிராளிகளால் சமர்ப்பணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நான் உட்பட ஏனைய நால்வரும் ஏலவே மன்றுக்கு வழக்காளியின் கோரிக்கையை ஏற்பதற்கு தயார் என்பதை அறிவித்துவிட்டனர்.
அதற்கு மேலதிகமாக தேவையென்றால் சமர்ப்பணங்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளனர்.
அதேநேரம், பதில் சமர்ப்பணங்களை அனைவரும் ஒரேநாளில் தான் அளிக்க வேண்டும் என்றில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதோடு பதில் சமர்ப்பணங்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்காதிருப்பது முக்கியமானது'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |