இலங்கையில் ஒழிக்கப்படும் நடைமுறை! ஏற்படவுள்ள சாதகமான மாற்றம்
தேர்தலின் போது ஒருவர் வாக்களித்துவிட்டதைச் சரிபார்க்க விரலில் மை பூசும் நடைமுறையை ஒழிப்பதன் மூலம், தேர்தலொன்றின் போது சுமார் 1 மில்லியன் ரூபா அளவில் பொது மக்களின் வரிப் பணம் சேமிக்கப்படும் என 'பெஃப்ரல்' அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு எல்லா வகையிலும் மிகச் சிறந்ததொரு முடிவு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெஃப்ரல்' அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
முன்மொழிவு
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முன்மொழிவு திடீரென உருவானதல்ல, மாறாக பல ஆண்டுகளாக தேர்தல் துறையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இந்த முறையை நீக்குவதன் மூலம், மை இறக்குமதி, விநியோகம் மற்றும் அதற்கான நிர்வாகச் செயல்முறைகளின் செலவு கணிசமான அளவிற்கு குறைக்கப்படும். மேலும் தேர்தல் செலவுகளைக் குறைப்பதன் மூலம் பொதுமக்களின் வரிப் பணத்தையும் சேமிக்க முடியும்.
வாக்களிக்கும்போது அடையாள அட்டையைக் கட்டாயமாக்குவதன் மூலம், வாக்காளரின் அடையாளச் சரிபார்ப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றொருவருக்காக வாக்களிப்பதற்கான வாய்ப்புகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

அழியாத மை பூசும் நடைமுறை
இந்த காரணத்தினால்தான், அழியாத மை பூசும் நடைமுறையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த தேவையில்லை என்ற கருத்து சில காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்திவிட்டார் என்பதை உறுதிப்படுத்த விரலில் அழியாத மை இடுவது இலங்கையின் தேர்தல் நடைமுறையின் ஒரு பகுதியாகப் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது.
வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கத் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதால், தற்போது மோசடியான வாக்களிப்பிற்கு வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.